ஞாபகம் இருக்கிறது!

அந்த ஒரு நாள்! அரை மணி நேரத்திற்கு மூன்று ரூபாய் கொடுத்தால் சைக்கிளில் என் வீட்டைச் சுற்றி வரலாம், பின்னால் இருக்கும் புழுதி பறக்கும் மேடு-பள்ளச் சாலையில் விரைந்து சென்று ஒரு பக்கமாக சருக்கலாம், கோபாலபுரத்தைச் சுற்றி பவனி வரலாம், வழியில் வரும் தெரிந்தவர்களுக்கு ஆனந்தமாய் கை அசைக்கலாம்! சில நேரங்களில் அரை மணி நேரம் தேவைப்படாதென்று, ஒன்றரை ரூபாய்க்கு கொடுத்து, கால் மணி நேரம் மட்டும் ஓட்டுவேன். வேறு யாருக்கும் இல்லாத சலுகை முருகன் சைக்கிள் கடையில் எனக்கு மட்டும்!

பெற்றோர் வீட்டிலில்லாத வேளை பார்த்து, தெரிந்தவர்கள் வழியில் வராத கணம் பார்த்து, ஆரவாரமாய், காற்றோடு போட்டி போட்டுக்கொண்டு சீறினேன்! இவ்வாறு என்னை மறந்து காற்றுடன் கலக்கும் தருணம் ஒன்றில்தான் அந்த அனுபவம் முதன்முதலில் ஏற்பட்டது!

அடிவயிற்றின் அடியில் ஏதோ செய்தது! என்னவென்று தெரியவில்லை, ஆனால்  வயிற்றுப் பட்டாம்பூச்சிகள் அல்ல என்று தெரிந்தது. அதைத் தொடர்ந்து அந்த கிளர்ச்சியூட்டும் உணர்வுக்காகவே சைக்கிள் ஓட்டும்போதெல்லாம் காற்றைப் போட்டிபோட்டுக் கொண்டேன்!

சில வாரங்கள் கழிந்தன. இதுவரை தொலைக்காட்சியில் பெண்கள் வந்தால் சேனலை மாற்ற விரையும் விரல்கள் உரையத் தொடங்கின. பெற்றோர் இல்லாத நேரத்தில் வண்ணத்துப் பெட்டி “வா வா” என்று அழைத்தது. தமிழ்த் திரைப்படப் பாடல்கள், கதாநாயகனை விழுங்கி, அதில் தசை அதிகமாகத் தெரிந்தவாறு, ஆடை விரக்தி அடைந்து ஆடும் கதாநாயகிகளைக் கொண்டு மயக்கியது. பெண்கள் காட்சியில் வரும் அலைவரிசைகளைத் தேடி மொய்த்தன கண்கள். போகப் போக, என்னுள் ஒரு மாற்றம்.

பள்ளி வகுப்பில் உடன் இருக்கும் தோழிகளுடன் பேசத் தயங்கிய நெஞ்சம் திரையில் வரும் பெண்களைக் கண்டு சொக்கியது. போதையில் திளைத்தது. முதல் முறை என்னை நானே இன்பப்படுத்திக் கொண்டது எப்போது என்று நினைவிலில்லை. காரணம், அது எனக்குக் கொடுத்த இன்பம். முதல் முறை அனுபவத்தின்பின் நான் அதை வழக்கமாக ஆக்கிக் கொண்டது.

சில வாரங்களில் உணர்ந்தேன். நான் சைக்கிளில் சீறிப்பாய்ந்த போது அடிவயிற்றின் கீழ் சீறிப்பாய்ந்த அந்த உணர்வு, என் உறுப்பு இன்பமடைந்து சுரந்த ஊற்று என்று.

அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்திருக்கலாம்!

திரையில் காணும் காட்சிகளெல்லாம் இவ்வுணர்வைத் தூண்டாவிட்டாலும், அவைகள் அந்த உணர்வை தூண்டுவதுபோலே இருந்தன. எதிரில் வரும் பெண்ணின் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்ட அந்த குழந்தைப் பார்வை போய், எதிரில் வருவது பெண் என்று தெரிந்ததும் பார்வை மார்பகங்கள் நோக்கியே  அம்பு விட்டன.

அது பழக்கமாகவே மாறி விட்டது.

பன்னிரெண்டாம் வகுப்புக்கு விரைந்து வருகிறேன். ஏனெனில், ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் என் பாலுணர்ச்சிக்கு அடிமையாகவே விளங்கினேன். நான் சுயமாக உடல் இன்பம் அடைந்ததற்கு கணக்கு வைத்திருக்கவில்லை. தவறென்று தெரிந்தும், தேவை இல்லை என்று அறிந்தும், உடலை விழுங்கும் பூதம் என்று உணர்ந்தும், அந்தக் கற்பனா போதையில் தன்னிலை மறந்து மிதந்து கொண்டிருந்தேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வின் பொழுது ஏற்பட்ட அதிர்வலைகள் என் வாழ்க்கையை, அது காட்டிருந்த திசையை திருப்பிப் போட்டது. அந்த உணர்ச்சிகள் பெரும்பாலும் திரைப்படங்கள் வழியாகவும், படித்த நூல்களாலும் வீரியம் இழந்தன.

நான் நடிகனாக வேண்டும் என்ற எண்ணமும், அது எனது வாழ்க்கை முறையாகவே அமைய வேண்டும் என்ற முனைப்பும், என் வாழ்க்கையை பற்றி நானே கேள்விகள் கேட்டு, என்னைப் பற்றி நானே எடைபோட்டுக்கொள்ள ஆரம்பித்த அற்புதத் தருணம்.

லயோலா கல்லூரியில் Visual Communication சேர்ந்தேன். அதில் இருந்த முனைப்பும் உத்வேகமும் தனிக்கதை.

நான் லயோலாவில் செலவழித்த மூன்று ஆண்டுகள் எனக்கு பொற்காலம்! குறிப்பாக இறுதியாண்டு! அதிலும் என் உலகத்தில் நுழைந்த அந்த மூன்று அழகு தேவதைகள்.

என் மனதில் ஓடிக்கொண்டு இருந்த அந்த இரண்டாண்டு தவிப்பை, எனக்கு நானே அடித்துக் கொண்ட அந்த சாட்டை அடிகளை, மனசாட்சி என்ற கடவுள் எனக்குள் குமுறிய கூச்சல்களை வெகுவாக விவரிக்கிறேன்:

“நான் அவ்வப்போது தானாகக் காணும் அரைநிர்வாணப் பெண்களும், நானாகவே அலைந்து கண்ட முழுநிர்வாணப் பெண்களும் என் உறக்கங்களை அழிகிறார்களே! அதுவரை கலாபம் விரித்து, காமப்பசியாற்றிய உடம்புகள், இப்போது என் உறக்கத்தை கொன்று குவிக்கின்றனவே! கெட்ட கனவுகளாகுகின்றனவே!

திரையில் தெரியும் பெண்கள் நேரில் வந்தால் என்ன செய்வேன்?

நேரில் காணும் பெண்களைப் பார்த்தால் இந்த உணர்வே வரவில்லையே! என்னதான் என் பிரச்சனை? இது பிரச்சனைதானா?

இது இயல்புதானே?

எல்லா ஆண்களும் கடந்துவரும் கனவுகள்தானே?

இதில் ஒரு தப்பும் இல்லையே!

அய்யோ! அனைவரும் நான் மெலிதாக இருப்பதாக சொல்கிறார்களே!

என் கைகளில் நரம்பு தெறிப்பதும், என் தோள்கள் குறுகி இருப்பதும், வீரமாய் நிமிர்ந்திருக்க வேண்டிய என் மார்பு, என்னுள்ளேயே விழுங்கி இருப்பதும் இதனால்தானோ!

இரு! நன்றாக கவனி!

நீ பார்க்கும் காட்சிகளில், ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டு, உள்ளே புகுத்தி செய்யும் புணர்தலெல்லாம் தாமாக நடக்க வேண்டிய விஷயம் அல்லவா? காமத்துக்கொரு அழகு இருக்கிறதே! அதில் கவிதை இருக்கிறதே! ஆனால் இது அது இல்லையே!

நடிப்பு! இவ்வாறு இவர்களெல்லாம் நடிக்கிறார்கள்! பாலுணர்ச்சிகளைக் கிளற, இவர்கள் செய்வது  சாகசம் மட்டுமில்லையே! தியாகம் அல்லவா!

கர்ப்பைக் கிழித்து, கூச்சலிட்டு விற்கும் இவர்கள் பாவமல்லவா!

ஒரு முறை கூட என்னுடன் இருக்கும் தோழிகளோடு, நான் பேசும்பொழுது, அவர்களிடம் இந்த உணர்வு வந்ததே இல்லையே!

திரையில் காணும் ஆண்கள் போல் நான் பெண்களை வலியில் வாட்டுபவன் இல்லையே!

நான் காதல் மிகுந்தவன் ஆயிற்றே! கவிதை புனைபவன் ஆயிற்றே!

எனக்கு திருமணமாகப் போகும் பெண்ணின் காதலனாயிற்றே!

அவளுடன் புணர்ந்து அழகழகாய் ஆசையாசையாய் குழந்தை மணிகளைப் பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறதே! அவர்கள் வளர்வதைப் பார்த்து, என் பேர் சொல்லும் பிள்ளைகளாய் வளர்த்து பெருமிதம் கொள்ளும் ஆர்வம் இருக்கிறதே!

குழந்தை ஒழுங்காகப் பிறக்கவில்லை என்றால்?

என் உயிர் உடல்களை உயிரணுக்களாய் நானே கொன்றுவிட்டால்?

அவைகள் ஊனமாகப் பிறந்துவிட்டால்?

அய்யோ! உடைந்துபோய் விடுவேனே!

என் குழந்தை என் பாவத்தை சுமக்க நேரிடுமே!”

இவைகளெல்லாம் என் வாடிக்கையை கண்ணாடி போட்டு என் கன்னத்தில் அரைந்தன. மிரண்டு போனேன்! உடல் நடுங்கினேன்!

இருந்தும், உடல் இன்பமுறுதல் என்னைப் பாலுணர்ச்சிக்குக் கட்டுப்படுத்தியே வைத்திருந்தது. அவ்வப்போது இன்பமுற இணையதளத்தில் புகுந்து புரண்டேன்.

நான் சொன்னதுபோல் அந்த மூன்று தேவதைகள் என்னையே உணர வைத்த புண்ணியவாதிகள். என் வகுப்பில் இருக்கும் மும்மூர்த்திகள்.

என் கல்லூரி வகுப்பில் இந்த மூன்று தோழிகளையும் நான் அறிந்து கொண்டது, புரிந்து கொண்டது, வகுப்பில் இருந்த அனைவரும் கொடநாடு சென்றபோதுதான்!

என்னவென்று தெரியவில்லை. அவ்வளவு அன்பு! பிரியம்! பாசம்!

கொடைக்கானல் தந்த அனுபவங்களுக்குப் பிறகு, அதனால் ஏற்பட்ட எங்கள் அன்பின் பிறகு, ஒரு நாளும் நாங்கள் அணைத்துக் கொள்ளாமல் கல்லூரி விட்டு சென்றதில்லை. அவ்வாறு அன்பைப் பரிமாற்றிக் கொள்ள மறந்த நாட்கள், நிறைவு பெறாமல் இருப்பதாகவே உணர்ந்தேன். மனம் விண்வெளிபோல் காற்றில்லாப் பையாக, எந்த உணர்வும் இல்லையெனினும் கனத்தது!    

நான் அந்த மூன்று தோழிகளை ஆசையாய்க் கட்டிப்பிடித்து அன்பு பரிமாற்றுவது வழக்கமாகவே மாறிற்று. நான் அவர்களுக்கு செய்த, அவ்வப்போது எனக்கே செய்து கொண்ட ஒரு ‘கட்டிப்பிடி வைத்தியத்திலும்’ ஒரு துளிக் காமும் இருந்ததே இல்லை.

தோழர்கள் சிலர் கிண்டல் செய்தாலும், அவ்வப்போது வயிறெரிந்தாலும், என் அணைப்பில் காமமில்லை, முழுக்க முழுக்க காதலும் அன்புமே பொங்கி இருந்தது என்பது அவர்களுக்குத் தெரிந்தது!

இவர்களுக்கு நான் கொடுத்த அன்பிற்கும், பெற்ற அன்பிற்கும் அளவெடுக்க முனைப்பது, ஆழ்கடலை அரைஜான் கயிற்றில் அளவெடுக்க முனைப்பதுபோல் முடியாதது. முட்டாள்தனமானது.

அந்த மூன்று தோழிகளை இனிமேல் பார்க்க இயலாது, கட்டி அனைத்து அன்பு மழைப் பொழிய இயலாது என்று நினைத்தாலே நெஞ்சு வலிக்கிறது! துக்கம் தொண்டை அடைக்கிறது! கண்கள் கசிகிறது!

என் பாலைவன மனதில் அமிர்தநதியாம் அன்புநதி நிறுவிய அழகுப்பூக்களே! ஆசை நிலவுகளே! ஆயிரம் நன்றிகள்!

இன்று, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

முன்புபோல் பாலுணர்வைக் கிளறும் அவசியம் இல்லாமல் போயிற்று.

அன்பைப் பகிர ஆரம்பித்தேன். வெளியே சென்று சாலைகள் நீளும் வரை நடந்தேன். வீசும் காற்றில் மூச்சு தவம் புரிந்தேன். நட்சத்திரங்களைக் கண்டு என்னையே தொலைக்க விரும்பினேன்.

கறைபடியா வானத்தில் கற்பனை வண்ணம் தீட்டினேன்.

இன்று உலகு அழகாய்த் தெரிகிறது.

பெண்கள் உடலுக்கும் ஆண்கள் உடலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. கோவிலாகவே தெரிகின்றன இருபால் உடல்களும்.

காமம் கண்விட்டு மறைந்தது.

தவறு செய்யும் கைகள், கதவை யாரவது தட்டிவிடுவார்களோ என்று கொதிக்கும் கண்கள், இவையாவும் சாந்தம் அடைந்தன.

என் இயல்பை, என் அன்பை, என்னுள் இருக்கும் காதலனை எனக்கே அறிமுகப்படுத்தி வைத்தன!

புன்னகை பூக்கும் என் பொன்சிரிப்பின் மாயாஜாலத்தை உணர வைத்தன!

இன்பமுற, களிப்புற, சிலிர்ப்புற, கிளர்ச்சிபெற அன்பு ஒன்று போதும் , வேறு எந்த பூதத்தையும் அண்டவிட வேண்டாம் என்று உணர்ந்தது!

மரக்கிளைகள் ஆட, பறவைகள் சங்கீதம் பாட, மக்களின் அன்பு அன்போடழைக்க…

மெல்லத் திறந்தது கதவு…

இந்த இருளில் வெளிச்சம் வீச…  

Advertisements